திருவாடானை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” சிறப்பு திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு : பொதுமக்களிடம் 609 கோரிக்கை மனுக்களை பெற்றார்
ராமநாதபுரம்,ஜூலை.16:-
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் 16.07.2026 காலை 09.00 மணி வரை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆய்வு செய்தார்.
முதற்கட்டமாக, திருவாடானை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம், துல்லியமான தகவல்களை வழங்குவதன் அவசியம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பின் தேவை குறித்து விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.


தொடர்ந்து மாவட்ட கலெக்டர் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு, பொருட்களின் தரம், உற்பத்தி முறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், பொருளாதார முன்னேற்றத்திற்காக உற்பத்திப் பொருட்களை விரிவான சந்தைகளுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை, தொற்றுநோய் பிரிவுகள், நிர்வாகப் பிரிவு மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து மருத்துவ சேவைகளை பார்வையிட்டதுடன், தொண்டி பெரிய பள்ளிவாசல் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோக நிலையை ஆய்வு செய்தார்.

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தை பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், பேரூராட்சியின் மின்கல வாகனங்களையும் ஆய்வு செய்ததுடன், தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொண்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், தொண்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறை, அடிப்படை வசதிகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ததுடன், ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 0.01 MLD திறன் கொண்ட கழிவு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (FSTP) மற்றும் வளம் மீட்புப் பூங்காவை பார்வையிட்டார்.மேலும் வளம் மீட்புப் பூங்காவில் பழைய கழிவுப் பொருட்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்றி, வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான புதிய பள்ளிக் கட்டிடம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, திட்டமிட்ட காலக்கெடுவில் தரமான பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.
தொண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடி, கல்வித் தரம், கற்றல் சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், தொண்டி தர்ஹா தெருவில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலைப் பணிகளை பார்வையிட்டு, குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க அறிவுறுத்தினார்.
தொண்டி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பதிவேடுகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துடன், தொண்டி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மருத்துவ சேவைகள், தடுப்பூசி முகாம் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, சேவைகள் சிறப்பாக நடைபெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் (திருவாடானை), வட்டாட்சியர் (ச.பா.தி), வட்டார வளர்ச்சி அலுவலகம், (திருவாடானை) உள்ளிட்ட துறைவாரியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், குடிநீர், சாலை, கல்வி, சுகாதாரம், வருவாய் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் பணிகள் குறித்து கேட்டறிந்து, அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து நேற்று (16.07.2026) காலை மாவட்ட கலெக்டர் , தொண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்று வந்த தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, கடற்கரையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், கடற்கரை பகுதியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதுடன், பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் எம்.ஆர்.பட்டிணம் அரசு நடுநிலைப்பள்ளி பின்புறத்தில் நடைபெற்ற குப்பைகள் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, பள்ளி வளாகத்தை எப்போதும் தூய்மையாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், தொடர்ந்து கொடிப்பங்கு ஊராட்சியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலைப் பண்ணையை பார்வையிட்டு, நாற்று உற்பத்தி, பராமரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், தரமான நாற்றுகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள தோட்டக்கலைத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.ஹபிபூர் ரஹ்மான், மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி , மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி, தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு, இளநிலை பொறியாளர் கடம்பநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.