கணவரின் பூர்வீக சொத்தை அபகரித்த நபர்களிடமிருந்து சொத்தை மீட்டு தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமநாதபுரத்தில் நடிகை ஷர்மிலி கண்ணீர் பேட்டி

ராமநாதபுரம்,ஜூலை.16:-
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடிகை சர்மிலியின் கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தனி நபர்கள் சிலர் அபகரித்து வைத்து இருப்பதால் அந்த சொத்தை உடனடியாக மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு நடிகை ஷர்மிலி தனது கணவருடன் இணைந்து கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை ஷர்மிலி, தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக அறிமுகமானார். கவுண்டமணி, விவேக், வடிவேலு, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகிய காமெடி நடிகர்களுடன் இவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஷர்மிலியின் கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்து ஒன்று ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள கோட்டை வாசல் விநாயகர் கோயில் எதிரே உள்ளது.
அந்த இடத்தில் தற்போது மூன்று கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் அந்த இடத்தை 2017-ம் ஆண்டு ராமநாதபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பட்டாவை பயன்படுத்தி வேறொருவர் பெயருக்க மாற்றம் செய்து அபகரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இடத்தை அபகரித்த நபர்களிடமிருந்து இடத்தை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க ஏற்கனவே மாவட்ட கலெக்டர் , மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருப்பதாகவும், ஆனால் தொடர்ந்து பலரின் தலையிட்டால் தங்களுக்கு சொந்தமான இடம் தங்களுக்கு கிடைக்காமல் இருந்து வருவதால் உடனடியாக இடத்தை அபகரித்த நபர்களிடம் இருந்து இடத்தை மீட்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு முதல்வர் விஜய்க்கு நடிகை ஷர்மிலி கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.
நடிகை ஷர்மிலியின் கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்து என சொல்லப்படும் இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது.
அந்த உணவகம் இன்று அடைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உணவகத்திற்கு முன்பு நின்றவாறு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ஷர்மிலி ஷட்டர் அடைக்கப்பட்டு ஏற்கனவே பூட்டு போடப்படிருந்த கடைக்கு மேலே மற்றொரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு சென்றார்.




