பட்டா குறைதீர் சிறப்பு முகாமில் கீழக்கரையில் 658 மனுக்களும், கடலாடியில் 380 மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்
கீழக்கரை, ஜூலை.16:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களின் பட்டா தொடர்பான குறைகளை அவர்களது வட்டத்திலேயே விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கீழக்கரை மற்றும் கடலாடி வட்டங்களிலும் 14.07.2026 மற்றும் 15.07.2026 ஆகிய இரு நாட்களில் பட்டா குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருந்திரளாக வருகை தந்து தங்களது மனுக்களை அளித்தனர்.
கீழக்கரை முகாமில், பட்டா மாறுதல் முழு புலம் (102), பட்டா மாறுதல் உட்பிரிவு (338), வீட்டுமனைப் பட்டா (05), கணினி திருத்தம் (167), மேல்முறையீட்டு மனு (06) என பட்டா தொடர்பான பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 618 மனுக்கள் பெறப்பட்டன. இதனுடன் உழவர் அட்டை மனுக்கள் (10) மற்றும் தொழிலாளர் நல வாரிய மனுக்கள் (30) ஆகியவை உட்பட மொத்தம் 40 மனுக்களும் சேர்ந்து, முகாமில் 658 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களில் 63 மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 595 மனுக்கள் தொடர்பாக தேவையான ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறை அதிகாரிகள் இம்மனுக்களை உரிய கால அவகாசத்திற்குள் தீர்வு கண்டு, விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடலாடி முகாமில், பட்டா மாறுதல் முழு புலம் (52), பட்டா மாறுதல் உட்பிரிவு (50), வீட்டுமனைப் பட்டா (39), கணினி திருத்தம் (85), மேல்முறையீட்டு மனு (23), UDR திருத்தம் (11), FMB திருத்தம் (18), விஸ்தீரன திருத்தம் (04), நான்குமால் (07), இறப்பு சான்று (01), இ-பட்டா (39), என பட்டா தொடர்பான பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டன. இதனுடன் உழவர் அட்டை மனுக்கள் (42) மற்றும் தொழிலாளர் நல வாரிய மனுக்கள் (09) ஆகியவை உட்பட மொத்தம் 51 மனுக்களும் சேர்ந்து, முகாமில் 380 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களில் 23 மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 306 மனுக்கள் தொடர்பாக தேவையான ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறை அதிகாரிகள் இம்மனுக்களை உரிய கால அவகாசத்திற்குள் தீர்வு கண்டு, விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோன்று, பரமக்குடி மற்றும் ராமேசுவரம் வட்டங்களில் 16.07.2026 மற்றும் 17.07.2026 தேதிகளில் பரமக்குடி மற்றும் ராமேசுவரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் கோட்டாட்சியர்கள் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாம்களில் பரமக்குடி மற்றும் ராமேசுவரம் வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பட்டா, உழவர் அட்டை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் தொடர்பான கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனு செய்து, உடனடியாக பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




