தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுக் கூட்டம் (DISHA) குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம்,ஜூலை.16:-

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி பேசியதாவது:-

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் நோக்கமாகும். மத்திய, மாநில அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், புதிய திட்டங்களுக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல்களைப் பெற்று விரைவாக நடைமுறைப்படுத்தவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீர் திட்டப் பணிகளில், சிவகங்கை தொண்டி தேசிய நெடுஞ்சாலை அனுமதி நிலுவையில் இருப்பதால் ஏற்பட்டுள்ள தாமதத்தைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை சந்தித்து பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகனை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா, மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (அனைவருக்கும் வீடு) திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசிய கிராம குடிநீர் திட்டம், நகர்ப்புற பரிமாற்றத்திற்கான அடல் விஷன் திட்டம், நுண் நீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த நீர் வடிப்பகுதி மேலாண்மை திட்டம், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய பாரம்பரிய இயற்கை வேளாண்மை திட்டம், தேசிய நிலையான வேளாண்மை இயக்கம், மண்வள அட்டை திட்டம், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பிரதான் மந்திரி வீடுகள் திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத திட்டம் (ஊரகம்) பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஜல்ஜீவன் திட்டம், முன்மாதிரி கிராமத்திட்டம், மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தன யோஜனா திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், விஷன் வாக்சாலியா திட்டம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் கற்பிப்போம் திட்டம், பிரதான் மந்திரி பூசன் கௌசல் விகாஷ் யோஜனா, பிரதான் மந்திரி கனிமவளத்துறை நல்வாழ்வு திட்டம், பிரதான் மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கம் திட்டம், கேலோ இந்தியா மாவட்ட மைய திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. துறைசார்ந்த அலுவலர்கள் துறை ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியன தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கர நாராயணன் , நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button