அரசியல்

திமுகவுடன், அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்? : அதிமுகவில் இருந்து விலகிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் எடப்பாடிக்கு கேள்வி!

சென்னை, ஜூன்.30:

“தீய சக்தி என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன், அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்? அண்ணன் எடப்பாடியார் அவர்களே” என்று கேள்வி கேட்டு அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பேரன்பிலும் என் அரசியல் பயணத்தை தொடங்கியவன் நான். பதவிக்காகவோ. சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல: ரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின். இந்த இயக்கம் சந்தித்த சோதனைகள் அத்தனையும் நீங்கள் அறிவீர்கள்.

அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றவன் இந்த விஜயபாஸ்கர், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், கரூரில் நாம் சந்தித்தது அரசியல் மட்டுமல்ல அப்பட்டமான அதிகார அடக்குமுறையும், நம் தொண்டர்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்ட துயரங்களும் தான்.

அதன் விளைவாக என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. என் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகள் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் கழக உடன்பிறப்புகள் வாழ்வு சிதைக்கப்பட்டது. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது.

அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும் கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற கழக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும்.

ஆனால், இத்தனை தியாகங்களுக்கும் நான் சுமந்த வேதனைகளுக்கும் இன்று எனக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது நெஞ்சில் பாய்ந்த துரோக ஈட்டி மட்டுமே. இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ…

இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் ஈன்றெடுத்த அரசியல் வாரிசுகள் நாம். நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? தீய சக்தி என்று ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன், அதிமுக எப்படி கைகோர்க்க முடியும்? அண்ணன் எடப்பாடியார் அவர்களே…

நீங்கள் முன்மொழிந்த அந்தச் சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர உங்களின் தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. உங்களைத்தான் இந்த இயக்கத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக நாங்களெல்லாம் உயிரைக் கொடுத்து முன்னிறுத்தினோம் ஆனால் எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாகக் மதித்து நீங்கள் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுநான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது.

உங்களின் இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாக எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை. என் உடன்பிறவா கழகத் தொண்டர்களே இந்த இயக்கத்திற்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். என் உயிரினும் மேலான கரூர் தொகுதி பொதுமக்களே உங்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button