அரசியல்

ஊழலை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரை அருகில் வைத்து கொண்டே பேசுகிறார் விஜய் : முன்னாள் அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 

கரூர் சம்பவம் நடந்த அன்று அங்கிருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார்? என்று நாட்டுக்கே தெரியும் என்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் கையில் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் பேச முடியுமா? ஊழலை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரை அருகில் வைத்து கொண்டே பேசுகிறார் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர், கரூர் மக்கள் சந்திப்பில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

கரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சிக்கும் வகையில் ஓடி ஓடி ஓடி என சினிமா பாடல் பாடினார். முதலமைச்சரின் இந்த செயலுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், கரூர் சம்பவத்தன்று சென்னைக்கு ஓடி வந்தது யார்? என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும் என்று கூறினார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு, “ஏற்கனவே கரூரில் உயிரிழந்தவர்களுக்கு விஜய்யின் முதுகு நினைவுச் சின்னமாக இருக்கிறது” என அவர் விமர்சித்தார்.

மேலும், “ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் கூட ஒரு கட்சியின் தலைவர் என்ற எண்ணத்திலேயே விஜய் பேசி வருகிறார். தனக்குக் கீழ் இயங்கும் காவல் துறையையே அவர் குற்றம் சாட்டுவது தவறான முன்னுதாரணம். தனது முதுகில் இருக்கும் கரைகளை மறைக்க மற்றவர்கள் மீது பழிபோடுவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பிரச்சார மேடைகளில் வீர வசனம் பேசி வரும் முதலமைச்சர் மேகதாது அணை குறித்து எங்கு பேசுகிறார்? மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் கையில் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் பேச முடியுமா? ஊழலை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரை அருகில் வைத்து கொண்டே பேசுகிறார்” என விமரசித்தார்.

கரூர் சம்பவத்திற்கு திமுக அரசு காரணமில்லை என திட்டவட்டமாக கூறிய அவர், விஜய்யின் திரைப்படக் குழுவினர் மற்றும் திட்டமிடப்படாத காலதாமதமே அந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என தெரிவித்தார். மேலும், இதனை சிபிஐ விசாரணையே உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கரூர் சம்பவத்தால் தனது மனதில் ஏற்பட்ட வலிகளும் காயங்களும் இன்னும் ஆறவில்லை என முதலமைச்சர் விஜய் உருக்கமாகப் பேசியதற்கு பதிலளித்த அவர், “சம்பவம் நடந்து 285 நாட்களுக்கு பிறகு இப்போது கரூருக்குச் சென்றுள்ளார். இந்த இடைப்பட்ட நாட்களில் பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களின் வீட்டுத் திருமண விழாக்கள், வெளிநாட்டில் நடைபெற்ற தனது திரைப்பட இசை வெளியீட்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு நடனமாடிய அவருக்கு, கரூருக்குச் செல்ல மட்டும் இத்தனை நாட்கள் ஏன் எடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேம்பாலம் கட்டுவதில் திமுக முறைகேடு செய்ததாக முதலமைச்சர் விஜய் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவசங்கர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழக்குகளை திமுக மீது போட்டார். அதில் குற்றப்பத்திரிகையை கூட அவர்களால் போட முடிந்ததில்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய்யால் நிரூபிக்க முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய தவெக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என குற்றம்சாட்டிய சிவசங்கர், தவெகவின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணன் மீது ஒரு பெண் கொடுத்த புகார் குறித்தோ, ஆலந்தூர் பகுதி செயலாளர் வேம்புலி மற்றும் சேலம் மணிகண்டன் ஆகியோர் மீதான புகார்கள் குறித்தோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரும் லஞ்சம் கைமாறியுள்ளதாக தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், இதுவே இந்த ஆட்சியின் ஊழலுக்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

சட்டமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்ததை கிண்டல் செய்த முதலமைச்சர், ஜனநாயக மரபுகள் தெரியாமல் பேசுகிறார் என்றும், எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய அனுமதிக்காத போது வெளிநடப்பு செய்வது சட்டமன்ற மரபு என்றும் அவர் பதில் அளித்தார்.

முதலமைச்சர் பதவிக்கான நாகரீகத்தோடும் நிதானத்தோடும் விஜய் செயல்பட வேண்டும் என்றும், சினிமா பாணி, சோஃபா மாடல்களை நிறுத்திக் கொண்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button