தமிழ்நாடு

தமிழக அரசுக்குத் தேசிய எஸ்சி ஆணையம் 7 நாட்கள் கெடு : ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் உதவித்தொகை உயர்வு

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான பராமரிப்பு நிதி மற்றும் உணவுக்கான உதவித்தொகையை உயர்த்துவது குறித்து, 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் அன்றாடப் பராமரிப்பு நிதி, உணவு மற்றும் இதர அத்தியாவசியச் செலவினங்களுக்கான உதவித்தொகை தற்போதைய விலைவாசிக்கு ஏற்பப் போதுமானதாக இல்லை என்றும், அதனை உடனடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரி நீலம் பண்பாட்டு மையத்தின் தலைமை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சி. வெங்கடேசன் என்பவர் தேசிய எஸ்சி ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த தேசிய எஸ்சி ஆணையம், இது குறித்து விளக்கம் கேட்டுத் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத் துறைச் செயலாளருக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்களை அனுப்பி வந்தது.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று முதல் கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அரசிடம் இருந்து பதில் வராததால், கடந்த 2026 ஏப்ரல் 29 அன்று மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப் பூர்வ விளக்கமோ அல்லது உரிய அறிக்கையோ கிடைக்க வில்லை என ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய எஸ்சி ஆணையத்தின் இயக்குநர் எஸ். ரவிவர்மன், ஜூலை 2, 2026 தேதியிட்டுத் தமிழக அரசுக்கு இரண்டாவது மற்றும் இறுதி நினைவூட்டல் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தக் கடிதம் கிடைத்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் திட்ட வட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தவறும்பட்சத்தில் அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button