ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்கள் : கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு
பனைக்குளம்,ஜூலை.09:-
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில், ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய (PHC) கூடுதல் கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சுகாதார நிலைய கட்டடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் தரம், கட்டுமானப் பொருட்களின் தரநிலை மற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தார். பொதுமக்கள் விரைவில் பயன்பெறும் வகையில் அனைத்து பணிகளும் உயர்தரத்துடன், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட பாம்பன் சந்தை சர்வீஸ் சாலையில் ஜல்லி மற்றும் மணல் விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, புகார் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தங்கச்சிமடம் – நான்குபனை பிரதான சாலையில் கழிவுநீர் கொட்டப்படுவது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கழிவுநீர் தேங்குவதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் உடனடி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மண்டபம் யூனியன் சாத்தான்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான கல்விச் சூழலை உருவாக்கும் வகையில் தரமான கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.பின்னர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குந்துகால் பகுதியில் அமைந்துள்ள குருசடைத் தீவு சுழல் சுற்றுலா மையத்தை ஆய்வு செய்து, சுற்றுலா பயணிகளிடம் சுற்றுலா தளத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி வனப்பாதுகாவலர் கோபிநாத், மண்டபம் வனச்சரக அலுவலர் ஜினோ பிளஸ்ஸில், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுரேந்தரன் , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டை இளங்கோவன் , உதவி பொறியாளர் கோகுலக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




