மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 460 பயனாளிகளுக்கு ரூ.8.32 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : தேனி கலெக்டர் வழங்கினார்
தேனி, ஜீலை. 09-
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜல்லிப்பட்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்
சபரி ஐங்கரன் முன்னிலை வகித்தார். தேனி கலெக்டர் வைத்திநாதன் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 460 பயனாளிகளுக்கு ரூ. 8.32 கோடி மதிப்பிலானநலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :-
மக்கள் மாவட்ட நிர்வாகத்தைத் தேடி வந்த நிலை மாறி, மாவட்ட நிர்வாகமே மக்களைத்தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள்தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றது. அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெரியகுளம் வட்டம், ஜல்லிப்பட்டி கிராமத்தைத் தேர்வு செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்து 86 மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் வகையிலும், மேலும், ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் நடவடிக்கை மீதும் என தற்பொழுது 460 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இன்று 126 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு கிடைக்கச் செய்வது. அதேபோல் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையச் செய்வது என்பதேயாகும். அந்த வகையில் இம்முகாமில் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அனைத்துத்துறை தலைமை அலுவலர்கள் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட உத்தரவிட்டுள்ளார்கள். பொதுமக்களாகிய நீங்கள் தங்கள் பகுதியில் முகாம்கள் நடைபெறும் பொழுது தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் உங்கள் வளர்ச்சிக்கும் தேவையான திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இதுபோன்ற முகாமில் கலந்துகொண்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் கிராமங்கள்தோறும் கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு தேவையான சத்தான உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப்பெண்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து சரியான உடல் எடையுடன் குழந்தையையும், தாயையும் பராமரித்திட வேண்டும். அதேபோல் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கையையும், உறுப்பினர்களின் பங்கேற்பையும் அதிகரித்து, பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
பொதுவாக மக்கள் மனு கொடுத்து விட்டோம் என்று எண்ணாமல் அரசின் திட்டங்களை தெரிந்து தாங்கள் பயன்பெறுவதுடன் மற்றவர்களும் பயன்பெற உறுதுணையாக இருந்திட வேண்டும் என தேனி கலெக்டர் வைத்திநாதன் தொரிவித்தார்.
முன்னதாக தேனி கலெக்டர் வருவாய்த்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை, மகளிர் திட்டம், பொதுசுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமாரிப்புத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டதுடன், இக்கண்காட்சி அரசு அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டது அல்ல. பொதுமக்களும் அந்த அரங்குகளை பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்
18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவு), 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல்
(முழுப் புலம்), 147 பயனாளிகளுக்கு ரூ.6,59,13,126/- மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- இயற்கை மரண உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.31,500/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.47,291/- மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முதிர்வுத் தொகையும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு உப்புக்கலவை மற்றும் தீவனசோள விதைத்தொகுப்புகளையும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17,562/- மதிப்பிலான விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறையின் சார்பில் 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.10,000/- மதிப்பிலான டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு ஊட்டச்சத்துப் பெட்டகங்களும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2,500/- மதிப்பிலான மருந்துப் பெட்டகங்களும், 5 பயனாளிகளுக்கு ரூ.3,750/- மதிப்பிலான ஆயுஷ் மகக்பேறு சஞ்சீவிப் பெட்டகங்களும், 16 பயனாளிகளுக்கு ரூ.80,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.23,400/- மதிப்பிலான சப்போட்டா மற்றும் பப்பாளி விதைத் தொகுப்புகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ரூ.8,800/- மதிப்பிலான பசுந்தாள் உரங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.90,50,000/- மகளிர் சுயஉதவிக்கு கடனுதவிகளும் மற்றும் 220 பயனாளிகளுக்கு இணையவழி சான்றிதழ்களும் என மொத்தம் 460 பயனாளிகளுக்கு ரூ.8,32,57,929/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.




