தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரத்தை வெளியிடாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, ஜூலை.10:-
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார். மேலும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவபரங்ளை பகிரங்கமமாக வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி கட்டணத்தை வெளியிடாத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை பாயும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், கட்டணம் செலுத்தவில்லை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்கான மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொடுக்காமல் காலதாமதம் செய்யக்கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பள்ளிகளில் கட்சி நிகழ்ச்சி விவகாரம் குறித்து பேசிய அவர், “பள்ளிகளில் எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தடை உள்ளது. அதையும் மீறி கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சியை பள்ளியில் காெண்டாடியது குறித்து உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு சட்டபூர்வமாக பதில் அளிப்போம்” என தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் மின்வெட்டை காரணம் காட்டி தனியார் பள்ளி விடுமுறை விடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “மின்சார பிரச்சனை என்பதைத் தாண்டி பள்ளிகளில் எந்த சுழலிலும் தேவையின்றி விடுமுறை விடக்கூடாது. காஞ்சிபுரம் தனியார் பள்ளி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதே போன்று ஆசிரியர்கள், பணியாளர்கள் காலியிடங்களும் கண்டறியப்பட்டு அரசியல் தலையீடு இல்லாமல் நிரப்பப்படும். மேலும் பள்ளிகளில் எந்த நேரம் வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்” எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.




