தமிழ்நாடு

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா : தமிழக அரசு சார்பில் மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (11.7.2026) , எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. ராஜீவ், ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் முத்துக்கோன் பாக்கியத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு 11.07.1710 அன்று பிறந்தார். ஜெக வீரராம எட்டப்பநாயக்கரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். நெல்லைச் சீமையிலுள்ள அனைத்து பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலித்த ஆங்கிலேயர்கள். 1755 ஆம் ஆண்டு எட்டையபுரத்திற்கும் வரிகேட்டு ஓலை அனுப்பினர்.


இதனை எதிர்த்து, ஆங்கிலேயர்களுக்கு நாம் ஏன் வரி தர வேண்டும் என்று எட்டையபுரம் மன்னரிடம் மாவீரன் அழகுமுத்துக்கோன் கடுமையாக வாதிட்டதன் விளைவாக, மன்னரும் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் உணர்வினை ஏற்றுக்கொண்டார்.

எட்டப்ப மன்னர் ஆங்கிலேயருக்கு வரிகட்ட மறுத்ததால், 1756-ஆம் ஆண்டு கான்சாகிப் என்பவரை நெல்லைச் சீமைக்குக் கமாண்டராக நியமித்தனர். கமாண்டர் கான்சாகிப்பின் பீரங்கிப் படையானது எட்டையபுரத்தை தாக்கியதையடுத்து எட்டையபுரம் ஆங்கிலேயர் வசமானது. எட்டையபுரத்தை மீட்டெடுக்க மாவேலி ஓடை. பெத்தநாயக்கனூர் பகுதியிலிருந்த வீரர்களைத் தனது படையில் சேர்த்து, அவர்களுக்குப் போதிய போர்ப் பயிற்சி அளித்து, இரண்டு பெரிய படைகளை உருவாக்கினார். வெங்கடேஸ்வர எட்டப்பர், அழகு முத்துக்கோன் ஆகிய இருவரது தலைமையிலும் வீரர்கள் போரில் ஈடுபட்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் தலைமையேற்ற படை பெத்தநாயக்கனூர் கோட்டையில் இரவில் தங்கியது. இதை உளவு அறிந்த நெல்லைச் சீமையின் கமாண்டர் கான்சாகிப் 200-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் இருந்த அழகுமுத்துக்கோன் படையினரை திடீர் தாக்குதலை நடத்தி 1759 ஆம் ஆண்டு சிறை பிடித்தனர். மன்னிப்பு கேட்டால் உயிர்ப்பிச்சை தருவதாக ஆங்கிலேயர்கள் தெரிவித்தனர். “அடிமைப்பட்டு உயிர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர்விடுவோம்” என்று கம்பீரமாக மாவீரன் அழகு முத்துக்கோன் முழக்கமிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் உடனிருந்த ஏழு வீரர்களையும் பீரங்கி வாயில் கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றனர். இந்த கொடூரச் சம்பவத்தின் மூலம் விடுதலைக்கான விதை தமிழகத்தில் விதைக்கப்பட்டது.

விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், அன்னாரின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் திரு. க.வி.விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர்(பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி.இ.ஆ.ப. செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண்தம்புராஜ்.இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button