இராஜசிங்கமங்கலத்தில் நடந்த பட்டா சிறப்பு குறைதீர் முகாமில் 283 மனுக்கள் பெறப்பட்டு 37 மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்

ராமநாதபுரம்,ஜூலை.09:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களின் பட்டா தொடர்பான குறைகளை அவர்களது வட்டத்திலேயே விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இராஜசிமங்கலம் வட்டத்தில் 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரு நாட்களில் பட்டா குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு வட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பெருந்திரளாக வருகை தந்து தங்களது மனுக்களை அளித்தனர்.
இம்முகாமில், பட்டா மாறுதல் முழு புலம் (58), பட்டா மாறுதல் உட்பிரிவு (31), வீட்டுமனைப் பட்டா (10), கணினி திருத்தம் (130), மேல்முறையீட்டு மனு (08), FMB திருத்தம் (1) மற்றும் ஆக்கிரமிப்பு (04) என பட்டா தொடர்பான பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 242 மனுக்கள் பெறப்பட்டன. இதனுடன் உழவர் அட்டை மனுக்கள் (29) மற்றும் தொழிலாளர் நல வாரிய மனுக்கள் (12) ஆகியவை உட்பட மொத்தம் 41 மனுக்களும் சேர்ந்து, முகாமில் 283 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களில் 37 மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 205 மனுக்கள் தொடர்பாக தேவையான ஆவணச் சரிபார்ப்பு மற்றும் கள ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய்த் துறை அதிகாரிகள் இம்மனுக்களை உரிய கால அவகாசத்திற்குள் தீர்வு கண்டு, விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பட்டா தொடர்பான குறைகளை உள்ளூரிலேயே தீர்த்து வைக்கும் இத்தகைய சிறப்பு முகாம்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற உள்ளது தங்களுடைய பட்டா, கணினி திருத்தம், உட்பிரிவு உள்ளிட்ட நிலம் தொடர்பான குறைகளுக்காக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தை சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தவறாமல் உரிய கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




